1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

1,100 ஆண்டுகள் பழைமையான கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில், 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவை சிலையையும், சில கல்வெட்டுகளையும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி, நீலி, காடுகிழாள், கானமற் செல்வி என்று பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறாள். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில், ‘ஐயை கோட்டம்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில், கொற்றவை வழிபாடு மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அவர்களின் கீழ் ஆட்சிசெய்த வாணர்கள், மலையமான்கள் பல்லவர்களின் கலைப் பாணியைப் பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.

வேப்பூர் அருகே, பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலில் கொற்றவை தனி மேடையில் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருக்கிறது. தொடக்கக் காலத்தில் இது, கருவறைக்குள் இருந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது . இது, கி.பி 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பல்லவர்களின் கலைப் பாணியைப் பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது. ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. கொற்றவை, எருமைத் தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார். மார்பில் சன்னவீரம் உள்ளது. இந்த சன்னவீரம் என்பது போர்க் கடவுள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும்.

வலதுபுற மேற்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளன. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக் கரங்களுடன் உள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது, தன்னுடைய நாடு போரில் வெற்றிபெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து, கொற்றவைக்குப் படையல் இட்டு, தன் தலையைத் தானே வெட்டிப் பலி கொடுத்துக்கொள்வதாகும். இடப்புறம், கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார்.

இங்கு, எருமைத் தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டில், முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன், இந்தக் கொற்றவை சிலையைச் செய்து வைத்திருப்பதைத் தெரிவிக்கிறது. மலையமான்கள், சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். சில காலம் சுதந்திரமாகவும் சில காலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சிபுரிந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது, அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும்.

இங்கு காணப்படும் கொற்றவை சிலை தனித்துவம் வாய்ந்தது. கொற்றவைக்கு அருகருகே சிங்கம் மற்றும் மான் காணப்படுகிறது. கையில் பாம்பு வைத்திருக்கும் கொற்றவையை இங்கு மட்டுமே காண முடியும். இது, வேறு எங்கும் காண இயலாத காட்சி.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: