சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா தொடக்கம்: வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது!

சிங்கப்பூரில் தமிழ் மொழி திருவிழா கடந்த மார்ச் 31-ம் தேதி தொடங்கியது. இவ்விழா வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.

சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் தமிழும் ஒன்று. அந்த நாட்டில் தமிழ் செழித்தோங்க அரசு ஆதரவுடன் கடந்த 2000-மாவது ஆண்டில் ‘தமிழ் மொழி கவுன்சில்’ தொடங்கப்பட்டது. அந்த அமைப்பு சார்பில் கடந்த 2007 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ் மொழி திருவிழா எம்இஎஸ் தியேட்டர் வளாகத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவை சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

வரும் 29-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் நடத்தப்படும் இலக்கியம், பேச்சுப் போட்டி, கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் தமிழர்கள் பங்கேற்கலாம். இது ‘தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்’ என ஒவ்வொருவரையும் ஊக்குவிப்பதாக இருக்கும். இந்தத் திருவிழாவில் தமிழகம், இலங்கை உட்பட உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு தமிழ் அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்விழாவில் மொத்தம் 49 பங்கேற்பாளர்கள் மற்றும் 4 பள்ளிகளின் சார்பில் 58 நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இதில் 11 புதிய பங்கேற்பாளர்கள் சார்பில் நடனம், நாடகம் மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும். குறிப்பாக ஆர்ட்ஸ்விங் நிறுவனம் இந்த ஆண்டு முதல்முறையாக பங்கேற்கிறது. இவர்கள் ‘மண்ணும் மகளும் – கன்னகி வாழ்வில் ஐந்தினை’ என்ற நிகழ்ச்சியை வரும் 28-ம் தேதி நடத்த உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மொழி கவுன்சில் தலைவர் ராஜாராம் கூறும்போது, “இளைய தலைமுறையினர் தமிழில் பேசுவதை ஊக்குவிப்பதற்காக தமிழ் மொழி கவுன்சில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு மாத காலத்துக்கு நடைபெறும் இவ்விழாவில் தமிழ் மொழி ஆர்வலர்கள், இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வருங்கால சந்ததியினருக்காக தமிழ் மொழியைப் பாதுகாப்பதிலும் ஊக்குவிப்பதிலும் தமிழ் சமுதாயம் ஒன்றிணைந்து பாடுபடும் என்று நம்புகிறேன்” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: