இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் 26-ம் தேதியன்று திடீரென நாடாளுமன்றத்தை முடக்கிவைத்து அதிபர் மைத்திரி உத்தரவிட்டார். நவம்பர் 16-ம் தேதியன்றுதான் நாடாளுமன்றம் கூடும் என்றும் அவர் அறிவித்தார். மறுநாளே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்து பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகள் மற்றும் ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், அதிபர் மைத்திரி, மகிந்த ராஜபக்சேவுக்கு அடுத்தடுத்து அமைச்சர்களை நியமித்த வண்ணம் இருந்தார். மகிந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக மற்ற கட்சிகளை அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு மைத்திரியே நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், ஈழத் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிங்கள இனவாத இடதுசாரி அமைப்பான ஜே.வி.பி, மலையகத் தமிழர் கட்சிகளைக் கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மைத்திரி நடத்திய பேச்சு வார்த்தையில் அவருக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. பரபரப்பான இரு வாரங்களை அடுத்து கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அதிபர் மைத்திரி அறிவிக்கை வெளியிட்டார். ஏற்கெனவே மகிந்தவின் நியமனமே அரசமைப்புக்கு விரோதமானது எனச் சாடிவந்த எதிர்க்கட்சிகள், இதை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டன. உச்சகட்டமாக, மைத்திரி- ரணில் கூட்டணி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட 19-வது அரசமைப்புத் திருத்தத்தின் பின்னர் முக்கியத்துவம் பெற்ற தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் என்பவர், மைத்திரியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

தாக்கல்செய்யப்பட்ட மொத்தம் 17 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுக்கு அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் தேவை எனக் கேட்கப்பட்டதால், விசாரணை நீட்டிக்கப்பட்டது. காலையிலிருந்து நடந்த விசாரணை சிறுசிறு இடைவேளைகளுடன் நடந்து, மாலை 5 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது. நிறைவாக, தலைமை நீதிபதி நளின் பெரேரோ மற்றும் நீதிபதிகள் பிரியந்த ஜயவர்த்தன, பிரசந்த ஜயவர்த்தன ஆகியோர் இடைக்கால உத்தரவு ஒன்றை வெளியிட்டனர். “நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் மைத்திரி வெளியிட்ட உத்தரவு வரும் டிசம்பர் 7-ம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது” என்று இலங்கை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: