நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!

நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது - இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!

நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!

இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிபர் மைத்திரிக்கும் இடையில் மோதல் நிலை இருந்துவருகிறது. இது கடந்த அக்டோபரில் முறுகல்நிலை அடைந்து, அக்டோபர் 26-ம் தேதியன்று அதிரடியாக ரணிலைப் பதவியிலிருந்து நீக்கி மைத்திரி உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் அமர்த்தினார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, நாடாளுமன்றத்தை அதிபர் மைத்திரி தள்ளிவைத்தார். அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத்தையே கலைத்து நவம்ப 9-ம் தேதியன்று அறிவிக்கையை வெளியிட்டார். வரும் ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்றத்துக்கு புதிய தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிக்கையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிங்கள இனவாத இடதுசாரி ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பத்துக்கும் மேற்பட்ட தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 13-ம் தேதியன்று மைத்திரியின் அறிவிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. தொடர்ந்து இந்த மாதம் 4 முதல் 7-ம் தேதிவரை வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. தலைமை நீதிபதி நளின் ஃபெரெரோ தலைமையிலான ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிபர் மைத்திரியின் அறிவிக்கையானது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனத் தீர்ப்பளித்தது.

நாடாளுமன்றத்தை அதிபர் கலைப்பது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் முடியும் எனும் அரசமைப்புச் சட்டத்தின்படி இது செல்லாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது. இனியாவது அதிபர் மைத்திரி தேவையற்ற ஆலோசனைகளைக் கேட்காமல் உரியபடி நடந்துகொள்ள வேண்டும் என்று ரணிலுக்குப் பதிலாக அவரின் கட்சியில் முன்னிறுத்தப்பட்ட சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: