இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?

இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும், 10 பேர் துணை அமைச்சர்களாகவும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பின்னடைவை சந்தித்தமை, அதனை தொடர்ந்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அதில் பிரதமருக்கு எதிராக வாக்களித்த ஜனாதிபதியின் சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளடங்கலாக, 15 பேர் எதிர்த்தரப்புக்கு சென்றமை ஆகிய நிலைமைகளால் ஏற்பட்ட மாற்றங்களை சரி செய்யவே இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது.

இதனை ஒரு விஞ்ஞான ரீதியிலான அமைச்சரவை மாற்றம் என்று ஜனாதிபதி வர்ணித்திருந்தார். ஆனாலும், இது குறித்து ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் ஆய்வாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் காணப்படுகின்றன.

கூட்டணி அரசாங்கம் தனக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிக்கட்டவும், அமைச்சரவையில் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பவுமே இந்த மாற்றங்களை செய்தது என்று பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

அமைச்சுக்களுக்கான பொறுப்புக்களை முறையான அடிப்படையில் பகிர்வதற்கான முயற்சியே இந்த அமைச்சரவை மாற்றம் என்கிறார் கொழும்பில் வாழும் இந்திய செய்தியாளரும், இலங்கை அரசியலை நீண்டகாலமாக ஆராய்ந்து வருபவருமான பி.கே. பாலச்சந்திரன்.

எடுத்துக்காட்டாக, ஏற்கனவே தேசிய சகவாழ்வு அமைச்சகத்தை தன்வசம் வைத்திருந்த மனோ கணேசனுக்கு நல்லிணக்க அமைச்சு வழங்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய சகவாழ்வு அமைச்சின் மூலம் தான் ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டதை உணர்ந்தே தனக்கு, தன்வசம் இருந்த நல்லிணக்க அமைச்சகத்தை ஜனாதிபதி தனக்கு வழங்கியுள்ளதாக மனோ கணேசனும் பிபிசிக்கு கூறினார்.

போருக்கு பின், இலங்கையில் தேசிய நல்லிணக்கம் என்பது முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது. இனங்களுக்கிடையிலான முரண்பாடு களையப்பட வேண்டும் என்பது இங்கு ஓர் ஏக்கமாகவே காணப்படுகின்றது.

ஏற்கனவே தன் வசமுள்ள அரசகரும மொழிகள் அமைச்சின் மூலம் மொழிச் சட்டங்களை அமல்படுத்த தான் நிறையச் செய்துள்ளதாகக் கூறும் மனோ கணேசன், இதே மாதிரி அடுத்து வரப்போகும் இரு வருடங்களில் நல்லிணக்கத்துக்கு நிறையச் செய்வேன் என்று உறுதி கூறுகிறார்.

தேசிய நல்லிணக்க அமைச்சு இதுவரை ஜனாதிபதி வசம் இருந்தது, அதன் துணை அமைச்சராக வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் ஏ. எச். எம். பௌசி இருந்து வந்தார்.

இப்போது அது ஒரு சிறுபான்மை தமிழருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சரியான பங்கீட்டுக்கான ஏற்பாடாக அரசாங்கம் செய்துள்ளது என்கிறார் பாலச்சந்திரன்.

உண்மையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த 15 பேர் எதிர்த்தரப்புக்கு போன வெற்றிடத்தை நிரப்ப ஐக்கிய தேசியக் கட்சி நிறையச் சிரமப்பட்டுள்ளது என்கிறார் பாலச்சந்திரன்.

அதன் அடிப்படையில், முன்னர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து உள்ளூரிலும், சர்வதேச மட்டத்திலும் அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவுக்கும் இந்தத் தடவை அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இது அவர்கள் தம்மை பலமாக்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி என்று பார்க்கப்படுகின்றது.

இது ஒரு விஞ்ஞான ரீதியிலான அமைச்சரவை மாற்றம் என்று கூறப்பட்டாலும் தன்னால் இதனை அப்படி பார்க்க முடியவில்லை என்கிறார் மூத்த இலங்கை செய்தியாளரான என். எம். அமீன்.

உள்ளூர் ஆட்சி, மாகாண சபைகள், விளையாட்டு ஆகியன ஒருவருக்கு(பைசர் முஸ்தபா) வழங்கப்பட்டமை எவ்வாறு விஞ்ஞான அடிப்படை என்று கொள்ளமுடியும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பல முக்கிய பொறுப்புக்களை ஐக்கிய தேசியக் கட்சி தன்வசம் வைத்திருப்பதாகக் கூறும் என். எம். அமீன், சாதாரண மக்களை அடுத்த இரு வருடங்களிலாவது தம்வசம் ஈர்ப்பதற்கே இந்த முயற்சி என்கிறார்.

மனோ கணேசனுக்கு வழங்கப்பட்ட தேசிய நல்லிணக்க அமைச்சுப் பொறுப்பு அரசியலமைப்புப்படி ஜனாதிபதி வசமே இருக்க வேண்டியது என்ற கருத்து இருப்பதாகக் கூறும் அவர், இது சர்ச்சையாகலாம் என்றும் குறிப்பிடுகிறார்.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால் இன்னுமொரு விசயத்தையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதாவது ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பொறுத்தவரை உள்ளூராட்சி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான பொதுஜன பெரமுன முன்னிலை பெற்ற பின்னர் அவருடன் போவதே தமக்கு எதிர்காலம் என்ற கருத்து அவர்கள் மத்தியில் பலமாக காணப்படுகின்றது.

அவர்களது அழுத்தம் ஜனாதிபதியையும் முடிவு எடுப்பதில் தயக்கங்களை காண்பிக்கச் செய்தது.

ஆனால் இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக பொறுப்புக்களை கொடுத்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் அடுத்த இரு வருடத்துக்காவது தொடர்வது என்ற முடிவிலேயே அவர் இருப்பதாக தெரிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதற வைத்த 6 அமைச... திடீர் ராஜினாம செய்து இலங்கை அரசை பதறவைத்த 6 அமைச்சர்கள்! இலங்கையில் 6 அமைச்சர்கள் மற்றும் 10 துணை அமைச்சர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை...
தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும்,... செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்! உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர்,...
பெருந்தலைவர் காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம்!... பெருந்தலைவர் காமராஜர் ஒரு பண்பாட்டுப் பெட்டகம்! 1903:காமராஜர் விருதுபட்டி என்ற ஊரில் சிவகாமி அம்மையாருக்கும் - குமாரசாமிக்கும் மகனாகப் பிறந்தார். 1...
பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றிய பின் தமிழகம்!... பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றிய பின் தமிழகம்! இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்ப...
Tags: