பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

பொதுமக்கள் நிலங்களை விடுவித்தது இலங்கை ராணுவம்!

வட இலங்கையில் 683 ஏக்கர் பொதுமக்கள் நிலங்களை இராணுவம் விடுவித்தது.

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 5 கிராம சேவகர் பிரிவுகளை சேர்ந்த 683 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை இலங்கை இராணுவம் விடுவித்துள்ளது.

பலாலி இராணுவ தளத்தை அண்டிய பகுதியை சேர்ந்த நிலங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

இந்தக் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களான 964 குடும்பங்களிடம் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேன நாயக்காவால் அளிக்கப்பட்டன.

இந்தக் நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று சுமார் இரண்டு வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து இவை பொதுமக்களிடம் அளிக்கப்பட்டன.

இந்தப் பகுதிகளுக்கான போக்குவரத்து இன்னமும் சீரடையவில்லை என்ற போதிலும் தமது நிலம் விடுவிக்கப்பட்டமை தமக்கு பெரும் நிம்மதியே என்று நில உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் நிலங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதிலும் அதனால், இராணுவ முகாமின் பாதுகாப்புக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று இராணுவம் கூறியுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை போரின் பின்னர் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை விடுவிக்க வேண்டும் என்று பல இடங்களில் பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு என்னும் இடத்தில் இது போன்று இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட தமது நிலங்களை விடுவிக்கக் கோரி பல மாதங்களாக பொதுமக்கள் முகாம் வாசலில் கூடாரம் அமைத்து போராடி வருகின்றனர்.

வடக்கில் விடுதலைப் புலிகளுடனான மோதல் காலப் பகுதியில் தமது முகாம்களை அண்மித்த பெருமளவு நிலங்களை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. முகாம்களின் பாதுகாப்பு கருதியே அவை கையகப்படுத்தப்பட்டதாக இராணுவம் கூறி வருகின்றது.

விடுவிக்கப்பட்ட நிலங்களில் பெருமளவு முகாம் கட்டிடங்கள் இல்லாத போதிலும், விடுதலைப் புலிகளால் நடத்தப்படக் கூடிய பீராங்கி தாக்குதலில் இருந்து முகாமை தற்காத்துக் கொள்ளும் நோக்கில், அந்த பீரங்கிகளின் சுடு வீச்சு எல்லையை தவிர்க்கும் வகையில் இப்படியாக நிலங்கள் முகாம்களை ஒட்டிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஆனால், போர் முடிந்து 9 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் கூட அப்படியான பல நிலங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

அண்மையில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பிரச்சாரங்களின் போது இந்தக் நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: