இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு ஆதாரம் எங்கே? தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி!

இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு ஆதாரம் எங்கே? தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி!

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தில் காணாமல் போனோர் இறந்து விட்டதாக கூறும் விடயத்தில் அடிப்படை காரணங்கள் எவை என்பதை ஜனாதிபதி விளக்க வேண்டும் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஓய்வூ பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


காணாமல் போன ஒவ்வொருவர் தொடர்பிலும் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளனவா என அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு விசாரணைகள் நடத்தப்பட்டன என்றால், அது யாராலும், எப்போது நடத்தப்பட்டன என்பதையும், அதன் முடிவுகளையும் ஜனாதிபதி உலகறிய செய்ய வேண்டும் என சி.வி.விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்தார்.

பொறுப்புள்ள ஜனாதிபதி என்ற வகையில், அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என பொதுப்படையாக கூறுவது தன்னுடைய கடமைகளை தட்டிக்கழிப்பதாகவே தான் உணர்வதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவிக்கின்றார்.

20,000 பேரும் உயிரிழந்து விட்டமைக்கான ஆதாரங்கள் என்ன இருக்கின்றது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்புகின்றார்.

யுத்தத்தில் காணாமல் போனோர் மாத்திரமின்றி, யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியிலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களின் நிலைமை என்னவெனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார். அத்துடன், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாம் இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்தபோது யுத்தத்தில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடாமைக்கான காரணம் என்னவென அவர் கேள்வி எழுப்புகின்றார்.

அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஊடாக நியாயம் கிடைக்கவில்லை என்ற போதிலும், அந்த ஆணைக்குழுவினர் சில உண்மைகளை கண்டறிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் இந்த கருத்தானது, ஜனாதிபதியாக இருந்து கொண்டு உலகத்தை ஏமாற்றுவதற்காக ஒரு நாடகம் இதுவென அனந்தி சசிதரன் கூறுகின்றார்.

ஜனாதிபதி காணாமல் போனோர் விவகாரத்தில் எந்தவித பொறிமுறையையும் பயன்படுத்தாது, அனைவரும் உயிரிழந்துவிட்டார்கள் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகின்றார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இராணுவத்திடம் சரணடைந்தோரை நேரில் கண்ட லட்சக்கணக்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தில் கோட்டாபய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோரை குற்றம் சுமத்துவதை விடவும், ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரையும் தாம் குற்றம் சுமத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

நல்லாட்சி அரசாங்கம் என கூறிக் கொண்டு வந்த ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இதற்கான பொறுப்பை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

தாம் யுத்தத்தில் காணாமல்போனோரை கேட்கவில்லை எனவும் மாறாக, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களையே தாம் கேட்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.

யுத்தம் நிறைவடையும் தருணத்தில் ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து பலர் ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இதன்படி, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களை தாம் கோருவதாக அவர் குறிப்பிடுகின்றார். அதைவிடுத்து, யுத்தத்தின்போது காணாமல் போனோரை தாம் கோரவில்லை என அவர் கூறுகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை பேணியவர்களை சரணடையுமாறு ராணுவம் அறிவித்த சந்தர்ப்பத்தில், பலர் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அதற்கான சாட்சியங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சரணடைந்தவர்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே விளக்கமளிக்க வேண்டும் என அவர் கூறுகின்றார். யுத்தத்தில் காணாமல் போனோர் அனைவரும் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கூறுவது நியாயமான பதில் கிடையாது என சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிடுகின்றார்.

  • பிபிசி தமிழ்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: