இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!

கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போக்குவரத்து காவல் துறையினருக்கு மேலதிகமாக ராணுவ காவலர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ராணுவ காவலர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தற்போது காண முடிகின்றது.

வாரத்தில் 7 நாட்களும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் ராணுவ காவலர்கள் போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி, காவலர்களின் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு, கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த நடவடிக்கையானது, கொழும்பு நகரில் பரீட்சார்த்தமாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இந்த நடவடிக்கை விரிவாக்கப்படவுள்ளதாகவும் ராணுவம் தெரிவிக்கின்றது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: