வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் – வடமாகாண முதல்வர் உரை!

வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு - வடமாகாண முதல்வர் உரை!

வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் ஆண்டு – வடமாகாண முதல்வர் உரை!

வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் வருட முடிவு இன்றாகும். இன்னும் இரு வருடங்களில் எமது பதவிக்காலத்தை முடிவுறுத்த இருக்கும் இந்நேரத்தில் இது வரையில் நாம் சாதித்தவை என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. சுருக்கமாக இதுவரையான எமது பயணத்தை விளக்குகின்றேன்.

முதலாவதாகத் தமிழர் பெரும்பான்மையான ஒரே பிரதேசம் ஃ மாகாணம் எமது வடமாகாணமே என்ற கருத்தை வலியுறுத்தி எமது தனித்துவத்தைப் பேணி அதே நேரம் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வந்துள்ளோம். தமிழ் பேசும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்ற கருத்தை வலியுறுத்தி வந்துள்ளோம். அதே நேரம் எமது இனப்பரம்பலை இல்லாதொழிக்க எடுக்கப்பட்டு வரும் ஈன நடவடிக்கைகளை உலகறியச் செய்தும் வந்துள்ளோம்.

இரண்டாவதாக ஏறத்தாழ 35000 அலுவலர்களைக் கொண்ட வடமாகாணசபையின் மனித வலுவுக்கான தலைமையைக் கொடுத்து தகுந்த வழிகாட்டல் வழங்கி வந்துள்ளோம். இவை முன்பிருந்த சூழலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்த்தான் புரியும். எமது அலுவலர்கள் ஆளுநரின் கட்டளை வரும், அமைச்சர்களின் கட்டளைகள் வரும் என்ற பயமின்றி சட்டப்படி பக்கச்சார்பின்றித் தமது கடமைகளை ஆற்றக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். முன்னர் மேலிருந்து கீழ் நோக்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இப்பொழுது அடிமட்டத்துடன் கலந்துரையாடி மேல் நோக்கிச் செல்கின்றோம். அண்மைக்காலங்களில் அவ்வாறான எமது செயல்களை அசைக்க சிலர் நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றைத் தடுத்து முன்னேறி வருகின்றோம்.

மூன்றாவது மாகாணத்தின் முன்னுரிமைப் படுத்தப்பட்ட தேவைகள் இனங்காணப்பட்டுள்ளன. தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடாது தேவைக்கேற்றவாறு முன்னுரிமைப் படுத்தப்பட்டு நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. எனினும் போருக்குப் பின்னரான எமது மாகாணத்தின் தேவைகள் தொடர்பான ஆய்வுகளோ தேவைகள் பற்றிய கள நிலைமை பற்றிய ஆய்வுகளோ மேற்கொள்ளப்படாமல் எமது மாகாணத்திற்குப் பொருத்தமான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதில் பின்னடைவு எதிர்நோக்கப்பட்டுள்ளது. தற்போது பிரதம மந்திரியுடன் சேர்ந்து தேவைகள் சம்பந்தமான கணிப்பீடு தயார் செய்யப்படுகின்றது. முன்னர் நாம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இதனை எடுத்த போது முன்னைய அரசாங்கம் அதை நடத்த விடவில்லை. இப்பொழுது நடைபெறுகின்றது. அதற்கு எமது பிரதமருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவ்வாறு எம்மால் முன்னேற்றகரமானதும், ஆரோக்கியமானதுமான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை : –

  • எமது திணைக்களங்கள் ஊடாக 24 வெளிநாட்டு நன்கொடைத் திட்டங்களை வழிப்படுத்தி வருகின்றோம். தற்போதைய எமது நல்லாட்சியின் நிமித்தமும் வெளிப்படைத்தன்மையின் நிமித்தமும் கூடிய வெளிநாட்டு நன்கொடைத் திட்டங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஊழலற்ற நிர்வாகம் ஒன்றினை இயற்ற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
  • மக்களின் தேவைகளை வலியுறுத்தியதன் மூலம் 2016ம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நன்கொடையின் ஒதுக்கீட்டினை இரட்டிப்பாக்க முடிந்துள்ளது. அவை மக்களைச் சென்றடைய முழுப்பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம்.
  • பாரபட்சமின்றி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குச் சமமான முறையில் வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு அதன் அடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய விதத்திலான முழுமையான ஒதுக்கீடு இல்லாதிருப்பினும் மக்களின் மனநிறைவே எமது குறிக்கோளாக இருக்கின்றது.
  • மாகாண அரச திணைக்களங்கள் மற்றும் கல்வித்துறையில் காணப்பட்ட வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் வகையில் நியமனங்கள் வழங்குவதற்குத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளோம். நியமனங்களில் வெளிப்படைத் தன்மையை நாம் வெளிக்காட்டி வந்துள்ளோம்.
  • உதவிப்பாலம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் கொடைகளை பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாவித்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வருகின்றோம். பல வறியவர்கள் இதனால் நன்மை பெற்று வருகின்றார்கள். ஆரவாரமின்றி ஆறுதல்தரும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகின்றன. வீடுகள், மலசலகூடங்கள், வாழ்வாதார வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன.
  • மக்கள் குறைநிவர்த்தி நடமாடும் சேவைகளை இயற்றி இதுவரை காலமும் கவனியாது இருந்த மக்களின் குறைகளைத் தீர்த்து வருகின்றோம். இதுவரையில் எமது மாகாணத்தில் இவ்வாறான ஏழு குறைநிவர்த்தி நடமாடும் சேவைகளை நடாத்தி முடித்துள்ளோம்.
  • இடைத்தரகர்களை நம்பாமல் மக்களோடு நேரடித் தொடர்புகள் வைத்து அவர்கள் பிரச்சனைகளை அறிந்து அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
  • முதலமைச்சர் நிதியம் இதுவரை காலமும் எமக்கு வழங்கப்படாமல் இருந்தது. இனிவருங்காலத்தில் அதனை மக்கள் நலனிற்காகப் பாவிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக எமது மாண்புமிகு ஜனாதிபதியின் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முதலமைச்சர் நிதியம் பற்றி முயன்று நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது அது பற்றிய புதிய நியதிச்சட்ட வரைவு ஆளுநரின் பரிசீலிப்பில் இருக்கின்றது. அவரின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
  • வீதிகள் பலவற்றைச் சீர் செய்து வரும் அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.
  • சிறிய நடுத்தர தொழில்கள் மேம்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம். மாவட்ட ரீதியாக மக்கள் மேம்பாட்டு சிறுதொழில் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எமது ஸ்திரமான ஆளுகையின் கீழ் வங்கிகள், கடன்தரு நிலையங்கள் போன்றன மக்களுக்கு இலகுக் கடனுதவி வழங்க முன்வந்துள்ளார்கள்.
  • இதுவரை காலமும் உள்ள10ராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள10டாக முத்திரைத் தீர்வைகளால் பெறப்பட்ட வருமானம் மத்திய அரசாங்கத்திற்கே சென்றது. ஆனால் தற்பொழுது வடக்கு மாகாணத்திற்கென புதிதாக வருமான வரித் திணைக்களம் ஒன்று உருவாக்கப்பட்டு முத்திரைத் தீர்வைகளால் கிடைக்கப்படுகின்ற வருமானங்கள் எமது மாகாணத்திற்கே கிடைக்கக்கூடிய நிலைமையை உருவாக்கியுள்ளோம்.
  • பளையில் வளிவழி மின்னியற்றும் ஆலை, வடமராட்சியில் ஆடைகள் தொழிற்சாலை, வன்னியில் பழ மரக்கறி விருத்தித் தொழில் மையம், மன்னாரில் மீன் பதனிடும் ஆலை போன்ற பலவாறான தொழில் விருத்திகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
  • கூட்டுறவில் இதுகாறும் இருந்து வந்த குறைகளை நீக்கி கூட்டுறவைப் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.
  • மிக முக்கியமாக எமது வடமாகாணம் பற்றிய உண்மை நிலையை உலகறியச் செய்து வருகின்றோம். இந்தியப் பிரதமர், இங்கிலாந்துப் பிரதமர், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர், ஐக்கிய நாடுகளின் அமெரிக்க வதிவிடப் பிரதிநிதி மேலும் பன்னாட்டு இராஜதந்திரப் பிரதிநிதிகள் போன்றோர் எம்மை நாடி வந்து வடமாகாணத்தில் சந்தித்த போது அவர்களுக்கு எமது உண்மையான நிலையை அறிந்து கொள்ள வழி அமைத்து வந்துள்ளோம். மூடி மொழுகாமல் எமது உண்மை நிலையையும் எம் மக்களின் உளப் பாங்கையும் அரசாங்கத்துடனான உறவு நிலையையும் நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தி வந்துள்ளோம்.
  • கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடித் துறையில் பல்லாண்டுத் திட்டங்களை வகுத்து முன்னேற்றப் பாதைகளில் பயணிக்க நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளோம். போக்குவரத்து நடவடிக்கைகளில் சீர்திருத்தம் ஏற்படுத்தியுள்ளோம். போக்குவரத்து நடவடிக்கைகளைச் சீர்ப்படுத்துவதற்கான வடமாகாணப் போக்குவரத்து அதிகாரசபைக்கான நியதிச்சட்டம் தயாரிக்கப்பட்டு தற்போது வடமாகாணசபைக்கென போக்குவரத்து அதிகாரசபை வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுலாத்துறை பற்றிய ஆராய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். பல தடங்கல்கள் மத்தியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளோம். இத்துறை தமிழர் வரலாறு, பண்பாடு, கலாசாரம் என்பவற்றைப் பிரதிபலிக்கும் சுற்றுலா மையங்களை அடையாளப்படுத்தி அவற்றை வெளிக்கொணர்ந்து அதன்மூலம் எமது வரலாற்று கலாசாரப் பெருமையைப் பறைசாற்றுவதற்கும் எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு வழிகோலுவதற்கும் அடி எடுத்து வைத்துள்ளோம்.
  • பலமற்ற ஒரு நிறுவனமான 13 வது திருத்தச் சட்டம் தந்த மாகாணசபையை வடமாகாண மக்களின் ஏகோபித்த உரிமைக்குரல் கொடுப்பதற்கான ஒரு நிறுவனமாக மாற்றி அமைத்துத் தந்துள்ளோம். மக்கள் குரல் உரக்கக் கேட்டுவருகின்றது.
  • விளையாட்டுக்களில் எமது இளைஞர் யுவதிகள் பயிற்சி பெற்று போட்டிகளில் வெற்றி பெற ஆவன செய்து வந்துள்ளோம்.
  • எமது கலைகளை, நுண்கலைகளை, மொழியை மேம்படுத்த இயைபான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
  • இரண்டாவது தீவுப் பகுதிகளின் அபிவிருத்திக்காக ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. வரட்சியில் வாடிய இடங்களுக்கு வளமான குடிநீர் கிடைக்க வழி வகுத்துள்ளோம்.
  • சுற்றுச் சூழல் மாசுக்களை அகற்றி, கழிவகற்றலைத் திறம்பட நடத்த ஆவன செய்து வந்துள்ளோம். யாழ் நகர மேம்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சகல உதவிகளும் தரப்பட்டு வருகின்றன. எமக்கெதிரான பொதுவான குற்றச்சாட்டு பாரிய பொருளாதார செயற்பாடுகளில் இதுவரையில் இறங்காமையே. இதுபற்றிய எமது கொள்கைகளை எம்மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பொருளாதார விருத்தி என்பது எமது மாகாணத்தை இருந்த இடம் தெரியாமல் பிற மக்களின் முதலீட்டில் அமிழ்ந்து போகச் செய்வதாக அமையக் கூடாது. தெற்கிலிருந்து பாரிய முதலீடுகள் இங்கு கொண்டுவர வேண்டும் என்று எமது ஆளுநர் துடிக்கின்றார். அவற்றின் அந்தரங்கம் என்ன என்பதை நாம் புரியாதவர்கள் அல்ல. என் அறையினுள் தென்றல் வருவதை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதுவே சூறாவளியாக மாறி என்னை என் அறையில் இருந்து அடித்துப் போக விட மாட்டேன் என்றார் காந்திஜி.

நாம் எம் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்று துரிதமாக எடுக்கும் நடவடிக்கைகள் எம்மைப் பின்னர் மனவருத்தப்படச் செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட எம்மக்கள் படிப்படியாக அபிவிருத்தியில், தொழில் விருத்தியில் ஈடுபட, வாழ்வாதாரங்களை மேம்படுத்த நாம் எம்மால் முடிந்த சகலதையும் செய்தே வருகின்றோம். புலம்பெயர் மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். இனியும் ஏற்படுத்துவோம். தேவைகள் கணிப்புடன் பல்லாண்டுத் திட்டங்களை வகுத்து விஞ்ஞான ரீதியாக விருத்தியில் ஈடுபடுவோம். எமது சுற்றுச் சூழலை மாசடையச் செய்யவோ, எமது பாரம்பரியங்களை, பண்பாடுகளைக் காற்றில் விட்டுவிடவோ, பொருளாதார மேம்பாடு என்ற வகையில் பன்நாடுகளில் ஏற்பட்ட சமூகச் சீரழிவுகளை இங்கும் ஏற்படுத்தவோ நாம் இடமளிக்க மாட்டோம். எமது பயணத்தை நாம் ஆன்ம ரீதியாகவே வழிநடத்தி வருகின்றோம். ஆத்திரத்திற்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும், அதிவேக ஆற்றுப்படுத்தல்களுக்கும் இங்கு இடமில்லை. எமது பயணம் இறையாசியுடன் செவ்வனே தொடரும்.

நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: VELUPPILLAI THANGAVELU

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: