இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம் பாடவில்லை!

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தேசிய நிகழ்வு செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மேற்படி சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்பட்டது.

பாடசாலை மாணவர்கள் 100 பேர் இணைந்து, சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடினார்கள். சில வாரங்களுக்கு முன்னர், “சுதந்திர தின தேசிய நிகழ்வில், தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது” என, பொது நிர்வாகத்துறை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது. இருப்பினும், சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதில்லை எனும் முடிவினை தாம் எடுக்கவில்லை என்று, பிரதமர் மகிந்த ராசபக்ச தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே சுதந்திர தினைத்தைக் கொண்டாடும் இன்றைய தேசிய நிகழ்வில், சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடப்பட்டது. கடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறான தேசிய நிகழ்வுகளின் போது, தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: