இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!

இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்.

நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும், தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார். இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு :

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகின்றார். சிங்கள மக்கள் வாக்களித்து விட்டார்கள் என்பதற்காக, நாட்டை சிங்கள மயப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் பேசப்படும் என செல்வம் அடைகலநாதன் உறுதியளித்தார்.

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் காணப்படுகின்றமையினால், அதனை யாரும் தடுத்து நிறுத்தி விட இடமளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைகலநாதன் குறிப்பிடுகின்றார்.

மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு :

தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

தேசிய கீதம் இலங்கை அரசியலமைப்பில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் நினைவூட்டினார். தேசிய கீதத்தைச் சிங்கள மொழியில் மாத்திரம் பாடுவது என்ற தீர்மானமானது, நாட்டிலுள்ள இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் ஒரு விடயம் எனவும், இன நல்லிணக்கத்திற்கோ அல்லது மத நல்லிணக்கத்திற்கோ சாதகமான ஒன்றல்ல எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் இந்த தீர்மானமானது, இனவாத, மதவாத செயற்பாடுகள் மாத்திரமன்றி, ஒரு இனத்தின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு எனவும் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

மனோ கணேசனின் ட்விட்டர் பதிவு :

இலங்கையின் 2020ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம், தமிழ் மொழியில் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்டமையானது, தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாரிய பாதிப்பான விடயம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மற்றும் உத்தியோகப்பூர்வ மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் இலங்கை அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு சுதந்திர கிடைத்ததை நினைவுக் கூறும் வகையில் டோரிங்டன் பகுதியிலுள்ள சுதந்திர சதுக்கத்தை திறக்கும் நிகழ்வு 1949ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடத்தப்பட்டதாகவும், அதில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பாடப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன் பதிவிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: