தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம்

உலகத் தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வித்திட்ட, ‘கற்றவன் பண்டிதனாவான்’ என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டு எப்பொழுதும் வாசிக்கும் பழக்கத்தினை உடையவர்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்ற திருக்குறளின்படி வாழ்ந்தவர். தன் வீட்டில் பாரம்பரியமாக வைப்பில் உள்ள பல புத்தங்களை தன் நெருங்கிய நண்பர்களுடன் அவ்வப்போது வாசிக்கப் பகிர்ந்து வந்தார்.

வாசிப்பவர்களின் அறிவு முதிர்ச்சியை கண்டும் அகமகிழ்ந்தார். 1933ம் ஆண்டு தனது வீட்டிலேயே ஒரு அறையை ஒதுக்கி அருகில் வசிக்கும் பலரையும் வாசிக்க அழைத்தார், பின்பு வாசிக்க தெரியாதவர்களுக்குத் தானே வாசித்துக் காட்டி அவர்களுக்கு ஆர்வ மூட்டினார்.

1934ல் யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்திற்காக ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழில் கோரிக்கை செய்தார். மேலும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் மற்றும் முக்கிய ஓய்வு பெற்றவர்களை அணுகி புத்ததகங்களைச் சேகரித்தார். இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் அமைத்து வழி நடத்தினர். 

இவ்வாறாக மென்மேலும் வளர்ந்த யாழ்ப்பாண நூலகம் 1936ல் யாழ் மாநகரச் சபையின் முதலாவது முதல்வராகப் பணியாற்றிய சாம்சபாபதி, 1953இல் வண.லோங் அடிகளார் போன்றோரை உள்ளடக்கிய கல்விமான்கள், பிரமுகர்களைக் கொண்ட குழுக்களால் காலத்துக்குக் காலம் பாரிய வளர்ச்சி கண்டு, 1959 ஒக்டோபர் 11ஆம் திகதி தற்போதய இடத்தில் நிரந்தர, சர்வதேச தரத்திலான கட்டடத் தொகுதி பெற்று யாழ்ப் பாணத்திற்கே பெருமை சேர பணியாற்றத் தொடங்கியது இவ்வாறாக புத்தூர் பரோபகாரி கே.எம்.செல்லப்பாவின் சிந்தனையில் உதித்து செயல் வடிவம் பெற்று மெல்ல வளரத் தொடங்கிய யாழ். பொது நூலகம்.

இவரின் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 97,000 புத்தகங்களுடன், அசல் பனை ஓலைகள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு மொழிப் பத்திரிகைகள் இந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் சேகரிக்கப்பட்டு வைப்பில் இருந்தன. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக் கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப் பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். இன்று யாழ் மண்ணில் ஓங்கி உயர்ந்து தமிழனின் பெருமையை பேசுகிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: