முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயண பற்றிய நூல் விமர்சனம்!

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயண பற்றிய நூல் விமர்சனம்!

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயண பற்றிய நூல் விமர்சனம்!

இரண்டு வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் “வேட்கை” என்னும் சிறைப் பயணக் குறிப்பை எழுதி வெளியிட்டுள்ளார்.

(1) எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் பின்னாடியும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும் என்று தோழர் லெனின் கூறினார். அதன்படி பார்க்கும் போது பிள்ளையானின் எழுத்து அவர் கூறும் கிழக்கு தமிழ் மக்களின் நலனைக்கூட பிரதிபலிக்கவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

(2) பிள்ளையான் சிறையில் நிறைய வாசித்தாக கூறுகிறார். எந்த நூல்கள் வாசித்தார் என்று குறிப்பிடவில்லை. ஒருவேளை சிறுவர் காமிக்ஸ் அல்லது அம்புலிமாமா புத்தகங்களை வாசித்திருப்பார் போல் இருக்கிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


(3) ஏனெனில் அவருடைய எழுத்துக்கள் குழந்தைப் பிள்ளைத்தனமாகவே இருக்கிறது. அவர் குழந்தைப் போராளியாக மட்டுமல்ல குழந்தை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போது குழந்தை எழுத்தாளருமாக இருக்கின்றார் என்ற முடிவிற்கே அவருடைய எழுத்தைப் படித்த பின்பு வர தோன்றுகிறது.

(4) தனது போராளி அனுபவம், தனது முதலமைச்சர் அனுபவம், தனது சிறை அனுபவம் எல்லாம் கூறும் பிள்ளையான் தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்கு பற்றி ஏன் எதுவும் குறிப்பிடவில்லை என்று புரியவில்லை.

(5) 1987ல் ஆயுதங்களை ஒப்படைத்தபோது போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கிய இலங்கை அரசு, 2009ல் தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தபோது ஏன் பொது மன்னிப்பு வழங்கவில்லை என்று கேட்டுள்ளார்.

(6) நியாயமான கேள்விதான். ஆனால் இதை அவர் பதவியில் இருந்தபோது அன்றைய இலங்கை அரசிடம் கேட்டு பெற்றிருந்தால் இன்று இப்படி சிறையில் அடைபட்டிருக்க வேண்டியிருக்காதே. கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல் இப்ப தன்னை சிறையில் அடைத்த பின்பு இது பற்றி கேட்பதால் என்ன பயன்?

(7) இன்றைய நல்லாட்சி அரசு வேண்டுமென்றே தன்னை சிறையில் அடைத்து பழி வாங்குவதாக குறிப்பிடுகிறார். உண்மைதான். மகிந்தவின் குடும்பத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கும் அரசு பிள்ளையானுக்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் வழங்காமல் அடைத்து வைத்திருப்பது தவறுதான்.

(8) ஆனால் அதேநேரத்தில் “தன் குடும்பத்தவர்களைக் காப்பாற்றிய மகிந்த ராஜபக்ச ஏன் தன்னைக் காப்பாற்றவில்லை?” என்ற கேள்வியை பிள்ளையான் எழுப்பியிருந்தால், சிங்கள தலைமைகளால் பயன்படுத்தி விட்டு வீசி எறியப்பட்ட கறிவேப்பிலைகளில் தானும் ஒருவன் என்பதை அவர் உணர்ந்திருக்க முடியும்.

(9) பிள்ளையான் முதலமைச்சராக இருந்தபோது அவரையும் அவருடைய கட்சி தலைவர் ரகுவையும் உடனே கொழும்புக்கு வருமாறு அழைத்து மிகவும் பாதுகாப்பான பிரதேசத்தில் வைத்து அவருடைய தலைவர் ரகுவை இலங்கை அரசு தன் புலனாய்வு துறை மூலம் சுட்டுக் கொன்றது.

(10) ரகுவை புலிகள் சுட்டுக் கொல்லவில்லை என்று அப்போது தைரியமாக அறிக்கை விட்ட பிள்ளையான் அதன் பின்னர் ஏன் அந்த கொலை பற்றி பேசாமல் மௌனமானார் என்பது பற்றி எதுவும் எழுதவில்லை. குறிப்பாக தனது தலைவரின் கொலைக்கான நீதியைப் பெற ஏன் அவர் தன் பதவிக் காலத்தில் முயலவில்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

(11) இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சம்பூர் பிரதேசத்தில் தமிழ் மக்களை மீள் குடியேற்றம் செய்ய ரகு முயற்சி செய்துள்ளார். அதனாலேயே அதாவது இந்தியாவுக்காகவே ரகு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த உண்மையை பிள்ளையான் உணரவில்லையா அல்லது உணர்ந்தும் பகிரங்கமாக கூற அச்சப்படுகின்றாரா?

(12) ரோட்டு போட, வீடு கட்ட என பல திட்டங்களுக்கு இந்தியா உதவி செய்ததாக பிள்ளையான் மகிழ்வுடன் கூறுகிறார். ஆனால் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில்தான் இந்தியா அதிக ஆக்கிரமிப்பை செய்து சுரண்டிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி அவர் ஏனோ எழுதாமல் மறைக்கிறார்.

(13) ரோட்டு போடுதல், பாடசாலைக்கு பெயின்ட் அடித்தல் போன்றவற்றையே அபிவிருத்தி என்றும் அதனை தான் இலங்கை அரசு மூலம் சாதித்ததாகவும் குறிப்பிடுகிறார். அப்படி பார்த்தால் இலங்கையில் அதிக ரோடு போட்டவர்கள், தண்டவாளம் போட்டு ரயில் விட்டவர்கள், துறைமுகம் கட்டியவர்கள் ஆங்கிலேயரே. எனவே ஆங்கிலேயர் ஆட்சியை ஏற்க பிள்ளையான் தயாரா?

(14) தமிழரசுக் கட்சியினரை நோக்கி பிள்ளையான் எழுப்பியிருக்கும் கேள்விகள் நியாயமானவை. குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமையை நன்கு அம்பலப்படுத்துகின்றன. அதே நேரத்தில் இனப்படுகொலை செய்த அரசுக்கு துணை போன ஒருவருக்கு இந்த கேள்விகளை கேட்க என்ன தார்மீக தகுதி இருக்கிறது என்ற உணர்வும் படிப்பவர்களுக்கு ஏற்படுகின்றது.

(15) போராட துணிந்து விட்டவனுக்கு உத்வேகத்தை கொடுப்பதாகவே இலக்கியம் இருக்க வேண்டும் என்று மார்சிம் கார்க்கி கூறுகிறார். ஆனால் பிள்ளையானின் எழுத்துக்கள் போராடும் தமிழ் மக்களுக்கு உதவவில்லை. மாறாக இலங்கை அரசுக்கு துணை செய்வதாகவே இருக்கின்றது.

குறிப்பு- பிள்ளையான் குறிப்பிடும் பிரதேசங்களில் 1985ல் கால்நடையாக திரிந்துள்ளேன். இந்த நூலை படிக்கும்பொது மீண்டும் அந்த பிரதேசங்களில் திரியும் உணர்வு ஏற்பட்டது.

– பாலசந்திரன், லண்டன்.

Tags: