தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

‘கீப் ஸ்மைலிங்.. கீப் ஷூட்டிங்..’ – இந்த வார்த்தைகள்தான் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்குப் பிடித்தமானவை. அதன்படியே 7வது ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிரித்தமுகத்துடன் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை படைத்திருக்கிறார் இவர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில்தான் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் இவர். இவர் குஜராத் வாழ் தமிழர். 18 வயதான இளவேனில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 249.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டிக்கு முன்னதாக நடந்த சுற்றுப் போட்டியில், எந்த ஜூனியர் வீராங்கனையும் இதுவரை எடுக்காத 631.4 புள்ளிகளை எடுத்து புதிய உலக சாதனையையும் படைத்தார் இளவேனில்.

அதேபோல் குழுவாக நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இளவேனில், ஸ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த மூவரும் சேர்ந்து 1,876.9 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தனர். இதில் 24-வது ஷுட்டில் இளவேனில் வைத்த குறிதான் இந்தியாவுக்குப் பதக்கத்தைப் பெற்றுதந்தது. அந்த வகையில் இந்த ஒரே தொடரில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார் இளவேனில்.

இளவேனில் இந்த அளவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் சூரப்புலியாக இருக்க அவரது சகோதரரே காரணம். தொடக்கத்தில் இளவேனில் தடகளத்தில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ஆனால், ராணுவத்தில் இருந்த இளவேனிலின் சகோதரர், அங்கு கற்றுக் கொடுக்கப்படும் துப்பாக்கிச் சுடுதல் பற்றி அடிக்கடி தன் தங்கையுடன் பகிர்ந்திருக்கிறார். சகோதரர் சொன்ன துப்பாக்கிச் சாகச கதைகள் இளவேனிலுக்குப் பிடித்தப்போகவே, தடகளத்திலிருந்து துப்பாக்கிச் சுடுதலுக்கு மாறியிருக்கிறார். 2013-ல் துப்பாக்கியைப் பிடித்த இளவேனிலின் கைகள், இன்று பதக்கங்கள் பெறவும் அன்று அவரது சகோதரர் விதைத்த விதைதான் காரணம்.

பொதுவாகப் படிப்புக்கு நடுவே தங்களை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள சிலர் விளையாடுவார்கள். ஆனால், இளவேனில் கடுமையான துப்பாக்கிச் சுடுதல் பயிற்சிக்கு இடையேதான் பாடங்களை படிக்கவே செய்கிறார். “உண்மையில் பயிற்சியையும், படிப்பையும் சமாளிப்பது பெரும் சவாலான விஷயம். 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கும் சமயத்தில் நான் பல போட்டிகளில் கலந்துக்கொள்ள வேண்டியிருந்தது.

தேர்வு நடைபெறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் முழுமையாகப் பாடங்களில் கவனம் செலுத்தினேன். ஆனால், நான் எதிர்பார்த்ததைவிட தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றேன்” என்கிறார் அவர். தற்போது இளவேனில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: