அமெரிக்காவில் ஹெச்1-பி விசா பெற வழக்கத்துக்கு அதிகமாக விண்ணப்பம்

அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரிவதற்கு வெளிநாட்டவர்களுக்குத் தேவைப்படும் ஹெச்-1பி விசா கோரி அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு அரசு வழங்கும் அளவான 65 ஆயிரத்துக்கும் மேலான அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்ப்யூட்டர் குலுக்கல் அடிப்படையில் விசா வழங்கப்படும். அமெரிக்க நிறுவனங்களில் பணி புரியும் அமெரிக்கர் அல்லாத பிற நாட்டினர் தொடர்ந்து பணிபுரிவதற்கு ஹெச்-1பி விசா தேவையாகும்.

அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியா, சீனாவிலிருந்து பல ஆயிரக் கணக்கில் பணியாளர்களை தங்கள் நிறுவனங்களில் பணி புரிய நியமித்துள்ளன.

இதன்படி ஆண்டுதோறும் 65 ஆயிரம் பேருக்கு ஹெச்1பி விசா வழங்குவதென உச்சபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர உயர் படிப்புக்கு வருவோருக்காக 20 ஆயிரம் பேருக்கு ஹெச் 1 பி விசா வழங்கப்படும். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கும் கூடுதலாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு இவை சிறப்பு பிரிவின் கீழ் 2021-ம் ஆண்டு ஹெச்-1பி விசா வழங்கும் கணக்கில் சேர்க்கப்பட உள்ளன.

முன்னாள் அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்திருந்த விசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக அதிபர் ஜோ பை்டன் கூறியிருந்தார். இதனால் விசா வழங்கும் நடைமுறையானது சற்று காலதாமதமானது. குலுக்கல் முறையில் விசா வழங்கும் நடைமுறை டிசம்பர் 31,2021 வரைதொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைப் பிரிவு அறிவித்தது. டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த விதிமுறைகள் மார்ச் 9-ம் தேதியுடன் காலாவதியாகிறது.

அமெரிக்க குடியுரிமை மசோதா தாக்கல்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி அமெரிக்க குடியுரிமை சட்டம் 2021 நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு நாட்டிற்கும் இத்தனை பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற உச்ச வரம்பு நீக்கப்படுகிறது. அதேபோல வேலை அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அமெரிக்காவில் தொழில்நிமித்தமாக குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பயனடைவார்கள்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கார்டுக்காக காத்திருப்போருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவும் புதிய மசோதா வழிவகை செய்கிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: