அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மாவட்டம் கோணேரி ராசபுரத்தில் உள்ள கந்த ராதித்தேஸ்வரம் சிவன் கோயிலில், சோழப் பேரரசி செம்பியன் மாதேவியின் மூன்றரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலை இருந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன் கோயிலில் இருந்து திருடப்பட்ட இந்த சிலை, அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மண்டலத்தை ஆண்ட நான்கு அரசர்களை உருவாக்கியவர் பேரரசியார் செம்பியன் மாதேவி.

தமிழர்களின் வீரம் மற்றும் இறைபக்தியின் அடையாளமாய் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவி. 13 வயதில் கண்டராதித்ய சோழரை மணந்து, மதுராந்தக சோழரை பிரசவித்தவர், தனது 15 வது வயதில் கண்டராதித்ய சோழர் மறைந்ததால் சிவஞானியானார்.

கண்டராதித்ய சோழருக்கு பின்னர் அருஞ்சிய சோழரையும், அவருக்கு பின்னர் அவரது மகன் சுந்தர சோழரையும், அரியணை ஏற்றி வைத்தவர். அரசியல் நெருக்கடிகளை சாமர்த்தியமாகக் கையாண்டவர்.

அவருக்கு பின்னர் ராஜமாதாவாக இருந்து, உத்தமசோழர் என்று அழைக்கப்பட்ட தனது மகன் மதுராந்தக சோழரை மன்னராக்கியவர் செம்பியன் மாதேவி.

கணவர் மறைவுக்கு பின்னர் முற்றிலும் சிவஞானியான செம்பியன் மாதேவி, மண்ணாலும் சுடுகல்லாலும் கட்டிச் சிதைந்துபோன சிவாலயங்களைப் புதிதாக நிர்மாணித்தார். பல ஆயிரம் மைல்கள் தொலைவில் இருந்து, கருங்கற்களைக் கொண்டு வந்து ஏராளமான சிற்பிகளைக் கொண்டு பிரசித்தி பெற்ற 10 சிவாலயங்களை நிர்மாணித்து சிவத்தொண்டாற்றினார்.

கும்பகோணம் அருகே உள்ள கோணேரி ராசபுரத்தில் கண்டராதித்தேஸ்வரம் என்ற பெயரில் சிவாலயத்தை நிறுவி உலகிலேயே பெரிய அளவில் தொன்மையான ஐம்பொன் நடராஜர் சிலையை நிறுவினார் செம்பியன் மாதேவி. அதே கோவிலில் ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலையை அவரது மகனும் பட்டத்தரசருமான உத்தமச் சோழர் நிறுவினார்.

அவருக்கு பின்னர் பேரன் ராசராசசோழனை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து 1001 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார் செம்பியன்மாதேவி. 1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை மன்னர் முதலாம் ராஜேந்திர சோழர் அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது.

பழமையும் தொன்மையும் வாய்ந்த ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலை, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோனேரி ராசபுரத்தில் இருந்து மாயமானது. அப்போது இருந்த அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த சிலையை கண்டு கொள்ளவில்லை. இத்தனை சிறப்பு வாய்ந்த செம்பியன் மாதேவியின் சிலை திருடி கடத்தப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்கக் கோரியும் யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் புகைப்பட ஆதாரத்துடன் இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் அளித்தார்.

இந்த புகார் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி செம்பியன் மாதேவி சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்தார். அதன் பேரில் சனிக்கிழமை (29-09-2018) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினர்,செம்பியன் மாதேவி சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

வரலாற்று ஆய்வாளர்கள் அளித்த ஆவணங்களில் உள்ள செம்பியன் மாதேவியின் பழமையான புகைப்படம் மற்றும் வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு சிலை தமிழகத்துக்கு சொந்தமான இந்த சிலை திருடி கடத்தப்பட்டுள்ளது என்றும், திருடப்பட்ட பொருளை வைத்திருப்பது குற்றம் என்றும் வாஷிங்டன் டிசி-யில் உள்ள பிரியர் ஆர்ட் அருங்காட்சியகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்து, அதனை மீட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரத் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சிலைகடத்தல் தடுப்புபிரிவு காவல் துறையினர் தெரிவித்தனர்.

சோழப் பேரரசியார் செம்பியன் மாதேவியின் ஐம்பொன் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு விரைவில் தமிழகம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: