டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி…தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி

கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிதி திரட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டு வருகிறது. இணைய வழியாக நிதி அளிக்கவும் தொழிற்நுட்ப வசதிகள் கனடிய தமிழ்ப் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி வழங்குவதாக, 2021 பிப்ரவரி 23 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ் வளர்ச்சிக்காக இந்த நிதி ஒதுக்கப்படுவதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

இதற்காகத், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் கே.பண்டியராஜன் மற்றும் தமிழ் நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை நன்றி தெரிவித்துள்ளது.

இந்த நிதியுதவியைத் தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப் படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக, பேரவையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரச சார்பில் ரூ.1 கோடி நிதி அளிக்கப்பட்டது. இதே போன்று லண்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் 2018 ம் ஆண்டு துவங்கி நடைபெற்று வருகிறது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: